மஹாவிஷ்ணுவுக்கு உலகெங்கும் பல கோயில்கள் இருந்தாலும், திராவிட வேதம் என்றழைக்கப்படுகிற, பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும் திருக்கோயில்கள் மொத்தம் 108 ஆகும். இவற்றில் 105 கோயில்கள், இந்திய துணைக்கண்டத்திலும், 1 (சாளக்கிராமம்) நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டும் விஷ்ணுவின் விண்ணுலக உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.
இவை வைணவத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பூவுலகில் உள்ள 106 புனிதத்தலங்களில், 40 முந்தைய சோழ நாட்டிலும், 2 நடு நாட்டிலும் (கடலூர் அருகில்), 22 தொண்டை நாட்டிலும், 11 வட நாட்டிலும் (ஆந்திரா, உ.பி, குஜராத், நேபாளம்), 13 மலை நாட்டிலும் (கேரளம்), 18 பாண்டி நாட்டிலும் அமைந்துள்ளன. திவ்ய தேசங்கள் சிலவற்றில்(60) நின்ற திருக்கோலத்தோடும், சிலவற்றில்(27) கிடந்த திருக்கோலத்தோடும், சிலவற்றில்(21) வீற்றிருந்த திருக்கோலத்தோடும் மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.
ஆழ்வார் என்ற சொல் 'இறையனுபவத்தில் திளைப்பவர்' என்பதை குறிக்கும். வைணவத்தில் பன்னிருவர், ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 5 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவர்கள் தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணித்தும், இறையன்பைத் தேக்கிய மிக அழகான, தத்துவார்த்தமான பாசுரங்களை இயற்றியும், பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, மதச்சூழல் புதுப்பொலிவு பெறுவதற்கு காரணமாயினர் என்றால் அது மிகையில்லை. மிக முக்கியமாக, ஆழ்வார் பாசுரங்களில் சொல்லப்பட்டவை சாதி, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவை, வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பையும் பூரண சரணாகதி தத்துவத்தையும் பறைசாற்றுபவை ! ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் ஆழ்வார்களே தலையானவர்கள் எனலாம். பல காலகட்டங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் பாடல்களை தேடி எடுத்து அதை நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற தொகுப்பாக்கி, இசைப்படுத்திய பெருமை நாதமுனி என்ற பெருமகனாரைச் சாரும். இதற்காக, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டவர் அவர் !
சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ திவ்ய தேசங்களை குறித்து ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணம். தொடரின் முதல் பதிவு இது. முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். தேசிகனும் பல சமயங்களில் ஸ்ரீரங்கம் குறித்து தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். எனவே, திருக்கோழி என்ற திருவுறையூர் கோயில் பற்றிய பதிவோடு இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.

*****************************
இக்கோயில், திருச்சியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது. இத்தலம், நிஷ¤லபுரி, ஊர்சடை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் நாயகர் அழகிய மணவாளன் எனப்படுகிறார், நின்ற திருக்கோலத்தில், கைகளில் சங்கு/ பிரயோக சக்கரம் தாங்கி அருள் பாலிக்கிறார். வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், கமலவல்லி நாச்சியார் மற்றும் வாசவல்லி என்று அறியப்படுகிறார். திருமங்கையாழ்வாரும் (பாசுரம் 1762), குலசேகர ஆழ்வாரும் (பாசுரம் 662) இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) கல்யாண விமானம் மற்றும் கல்யாண தீர்த்தம் எனப்படுகின்றன. திருப்பாணாழ்வார் இங்கு தான் அவதரித்தார். அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், அவர் திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது !
*****************************
அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களை கீழே தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!
931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.
பதவுரை:
என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!
935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.
பதவுரை:
ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!
936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.
பதவுரை:
கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!

***************************
இக்கோயிலின் (திருக்கோழி அல்லது மூக்கேஸ்வரம்) பெயர்க் காரணம் , ஒரு தைரியமான கோழி வலிமை பொருந்திய ஒரு யானையை தன் அலகால் கொத்தி விரட்டியடித்ததாகக் கூறப்படும் ஒரு பழங்கதையுடன் தொடர்புடையது. உறையூர் பண்டைய சோழர் தலைநகரமாக விளங்கியது. இக்கோயிலை கட்டியவர் நந்த சோழன் என்றும், அரசனின் மகளாக அவதரித்த மஹாலஷ்மி ரங்கநாதரை மணந்ததாகவும், அந்த வைபவத்தை கொண்டாடும் விதமாக அரசன் இக்கோயிலை கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. கோயிலுள் நுழைந்தவுடன் காணப்படும் பெரிய மண்டபத்து தூண்களில் மிக அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களுக்கும், வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. திருப்பாணாழ்வாருக்கு, தனியாக ஒரு சன்னதி திருக்குளத்தின் வடப்புறம் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான வாயில் வடக்கு (ஸ்ரீரங்கம்) நோக்கியுள்ளது.

பங்குனி மாத உத்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்திலிருந்து உத்சவ மூர்த்தியான நம்பெருமாள் (உறையூரில் மூலவர் மட்டுமே இருக்கிறார்) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்குனி பூரத்தின் போது, கல்யாண உத்சவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் உத்சவம் கார்த்திகையில் நடைபெறுகிறது.
****************************
என்றென்றும் அன்புடன்
பாலா